
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: மொஜ்தபா கமேனி கடந்த மார்ச் 9ம் தேதி ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வாகிக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகும் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் இதுபோல பொதுவெளியில் தோன்றாமல் இருக்க இரு காரணங்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அதிகாரிகள் கூறுகிறார்கள். அது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கு மோதல் பிப்ரவரி 28ம் தேதி ஆரம்பித்த சூழலில், முதல் நாளே சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். தலைமை இல்லாமல் ஈரான் தடுமாறும் என நினைத்த போது, ஈரான் திருப்பி அடித்தது தனிக்கதை!

புதிய சுப்ரீம் லீடர்
அதற்கு நடுவே தான் கமேனி மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மார்ச் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இருந்த போதிலும், இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஏற்கனவே மொஜ்தபா கமேனி தனது தந்தை, மனைவி மற்றும் மகனை இழந்துவிட்டார். இவர் மட்டுமே தப்பிப் பிழைத்து இருக்கிறார். இவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
அமெரிக்கா தாக்குதலில் இவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இவர் எங்கு இருக்கிறார்.. எவ்வளவு காயம் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. எப்போதுமே எவ்வளவு இக்கட்டான சூழல் என்றாலும் அலி கமேனி பெர்சிய புத்தாண்டு நாளில் மக்களிடையே உரையாற்றுவார். இந்தாண்டு மார்ச் 20ம் தேதி பெர்சிய புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், புதிய சுப்ரீம் லீடர் மொஜ்தபா கமேனயும் தனது தந்தை போல உரையாற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
உளவு அமைப்புகள்
குறிப்பாக அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரேலின் மொசாட் உள்ளிட்ட சர்வதேச உளவு அமைப்புகள், மொஜ்தபா வீடியோ வந்தால் அதை வைத்து அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கக் கண்கொத்தி பாம்பாக காத்திருந்தது. இருப்பினும், அவர் வீடியோ எதையும் வெளியிடவில்லை. அவரிடமிருந்து ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கை மட்டுமே வந்தது. இது அவரது இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்த மர்மத்தை அதிகரித்தது.
இடையில் அவர் உயிரிழந்துவிட்டதாக எல்லாம் கூட தகவல் பரவியது. இருப்பினும், மொஜ்தபா உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஈரான் அதிகாரிகள் அவருடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய முயல்வதாக வெளியான தகவல்கள் இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.
சந்தேகம்
அதேநேரம் மொஜ்தபா உயிருடன் இருந்தாலும் கூட அவர் தான் முழுமையாக கண்ட்ரோலில் இருக்கிறார் என்பதற்கோ அவர்தான் உத்தரவுகளை எல்லாம் பிறப்பிக்கிறார் என்பதற்கோ தங்களிடம் ஆதாரம் இல்லை என்றே இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்க உளவுத் துறையும் கூட கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு கருத்தைத் தான் சொல்கிறது. இது தொடர்பாக அமெரிக்க உளவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர் உயிருடன் இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில், அவர் தான் கண்ட்ரோலில் இருக்கிறார் எனச் சொல்ல எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.
பெர்சிய புத்தாண்டு சமயத்தில் மொஜ்தபாவின் டெலிகிராம் சேனலில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த போட்டோ இப்போது எடுக்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் சிஐஏ உளவு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
இரு காரணங்கள்
ஆக மொத்தத்தில் மொஜ்தபா பொதுவெளியில் தோன்றாதது ஒரு மர்மமாகவே இருக்கும் நிலையில், இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஒன்று முன்பு சொன்னது போலப் பாதுகாப்பு காரணங்கள். அப்படி இல்லை என்றால் அவரது காயம் மோசமாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள். வீடியோ எடுக்க முடியாத அளவுக்கு மோசமாக அவர் காயமடைந்து இருக்கலாம் என்றும் அதுவும் கூட இந்த மர்மத்திற்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-supreme-leader-mystery-cia-mossad-hunt-unseen-leader-mojtaba-khamenei-is-still-missing-783735.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
