தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் | Gold rate rally is creating huge confusion: Within 3 weeks bearish market is turning into bullish

Business

oi-Vigneshkumar

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மிகப் பெரியளவில் சரிந்து வந்த சூழலில், இப்போது அதன் நிலை மாறுவது போலத் தெரிகிறது. வரலாற்றிலேயே தங்கம் விலை இவ்வளவு பெரிய சரிவைக் குறுகிய காலத்தில் எதிர்கொண்டதே இல்லை. இது தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது.

இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆரம்பித்த இந்த மோதல் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த தாக்குதலின் முதல் நாளே கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகு உடனே போர் முடிவுக்கு வரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அதற்கு நேர்மாறாக போர் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

Gold rate rally is creating huge confusion Within 3 weeks bearish market is turning into bullish

தங்கம்

இது சர்வதேச அளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான கப்பல் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 120 டாலர் வரையிலும் போனது. இந்த அச்சம் உலக நாடுகளை உலுக்கியது. இதனால் டாலர் மதிப்பும் தாறுமாறாக உயர்ந்தது.

டாலர் மதிப்பு உயர்ந்தது தங்கம் விலையிலும் எதிரொலித்தது. டாலர் மதிப்பு உயர்ந்ததால் தங்கம் விலை சரிய ஆரம்பித்தது. கடந்த இரு வாரங்களாகவே தங்கம் விலை மிகப் பெரியளவில் சரிந்தே வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் நிலைமை மாறியது. அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டது என்றும் சீக்கிரமே போர் முடியும் என்பது போலவும் டிரம்ப் பேசியிருந்தார்.

ஏற்றம்

அவர் இப்படி சொன்னவுடனேயே தங்கத்தின் விலை சுமார் 4% உயர்ந்து, ஒரு அவுன்ஸுக்கு $4,550ஐ தாண்டியது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரு வாரங்களில் மிகப் பெரியளவில் சரிந்த தங்கம் விலை மெல்ல ஏற ஆரம்பித்தது வியாபாரிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இது முறையான காரணங்களால் ஏற்பட்ட உயர்வு என்பதை விடச் சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்ட ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையில் இப்போது பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக நிபுணர் நவீன் குறிப்பிட்டார். இரு வாரங்களாகப் போர் பீதியில் இருந்து வர்த்தகர்கள் தங்கத்தை விற்றலால் விலை குறைந்த நிலையில், இப்போது நம்பிக்கையான சூழலால் தங்கத்தை வாங்க ஆரம்பித்துள்ளனர் என்றும் இதுவே விலை உயர்வுக்குக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார். அதேநேரம் இது குறுகிய கால ஏற்றமே தானே தவிர நிரந்தர தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குழப்பம்

இந்த முறை தங்கம் விலை நகர்வு பலருக்கும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. ஏனென்றால் போர்க் காலங்களில் தங்கம் விலை ஏற வேண்டும். ஆனால், வழக்கத்திற்கு மாறாகத் தங்கம் விலை குறைந்தது. அதேபோல போர் முடிகிறது என்ற சிக்னல் வந்தால் வழக்கமாகத் தங்கத்தின் விலையைக் குறையும். ஆனால் இப்போது கச்சா எண்ணெய் சப்ளை அபாயம் குறைந்து, டாலர் மதிப்பு குறைவதால் நேர்மாறாக தங்கம் விலை ஏறுகிறது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $5,626 என்ற உச்சத்தில் இருந்து இப்போது கிட்டத்தட்ட 20% சரிந்துள்ளது. தங்கத்தில் இவ்வளவு பெரிய ஏற்றமோ இறக்கமோ வரலாற்றிலேயே இருந்தது இல்லை. இதனால் தான் அது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டு வந்தது. இப்போது தங்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பாதுகாப்பான முதலீடு என்ற பிம்பத்தை அசைத்துப் பார்ப்பதாக இருக்கிறது!

நம்பிக்கையே இல்லை

மேலும், கச்சா எண்ணெய் விலையால் பணவீக்கம் அதிகரிப்பது, அமெரிக்கக் கடன் பத்திர வட்டி விகிதம் அதிகரிப்பது ஆகியவை தங்கத்தின் மீது அழுத்தத்தை உருவாக்குகின்றன. இவை எல்லாம் தங்கம் விலை சரிவுக்குக் காரணமாக இருந்தாலும் கூட உலக நாடுகளின் சென்டரல் வங்கிகள் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கியே வருகிறது. ஆனால் வாங்கும் வேகம் குறைந்துள்ளது..

ஆக மொத்தத்தில் தங்கம் என்பது இன்னுமே நீண்ட காலத்திற்கு ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், டிரம்ப் செயல்பாடுகள், அவர் எடுக்கும் முடிவுகள், புவிசார் அரசியல் சலசலப்பு, பணப்புழக்கம், பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் மீதான நம்பிக்கையை காலி செய்வதாகவே இருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-rate-rally-is-creating-huge-confusion-within-3-weeks-bearish-market-is-turning-into-bullish-784229.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo