
International
-Nantha Kumar R
டெல்அவிவ்: ஈரான் மீதான போரை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் புரிந்து வருகின்றன. கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கிய இந்த போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவர் முதல் நாள் போரிலேயே கொல்லப்பட்டார்.
இதனால் எளிதில் ஈரானை வீழ்த்தி விடலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் நினைத்தன. ஆனால் ஈரான் இருநாடுகளுக்கும் பணியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் பதிலடி
இதனால் இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரான், இஸ்ரேல் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை பழிவாங்க அவ்வப்போது ஈரான் தனது ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் டெல்அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலில் வெடித்த போராட்டம்
இந்நிலையில் தான் தற்போது ஈரான் போரை கைவிட வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டுக்குள் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பொதுமக்கள் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். டெல்அவிவ், ஹைஃபா, ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் பேரணி சென்றனர்.
பிரதமர் அலுவலகம் முற்றுகை
ஜெருசலேம் பாரிஸ் சதுக்கத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 250க்கும் அதிகமானவர்கள் திரண்டு ஈரான் போரை எதிர்த்தனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் ஈரான் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கோரிக்கை வைத்தனர். அதோடு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டெல் அவிவ் ஹபிமா சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஹைஃபாவின் ஹோரேவ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து கைது செய்தனர்.
நெதன்யாகுவிற்கு எதிர்ப்பு
இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகளால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. முடிவில்லாமல் தொடரும் போருக்கு வழிவகுக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஈரான் மீதான போரால் இஸ்ரேல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பான பீதியில் வாழ வேண்டிய நிலை உள்ளது. இதனால் இஸ்ரேல் உடனடியாக ஈரான் போரை கைவிட வேண்டும் என்று கூறினர். இந்த போராட்டம் இஸ்ரேலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-people-protest-across-the-nation-request-to-end-iran-war-011-785483.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
