
Business
oi-Oneindia Staff
மத்திய கிழக்கில் முடிவுக்கு வராத போர் சூழ்நிலை உலகளாவிய எரிபொருள் சந்தையை தொடர்ந்து நெருக்கடியிலேயே வைத்துள்ளது. ஒருப்பக்கம் போதுமான சப்ளை வளைகுடா நாடுகளில் இருந்து வராமல் இருப்பது, மறுபுறம் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்வது என இந்தியா போன்ற எரிபொருள் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் சிலிண்டர் மற்றும் எரிபொருள் விலையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் விஷயம் என்றாலும், ஏப்ரல் 1 ஆம் தேதி எரிபொருள் விலை தடாலடியாக உயர்ந்து இன்றைய நாளை மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று வர்த்தக சிலிண்டர் விலை 195.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து விமான எரிபொருள் (ATF) விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திடீர் உயர்வு, விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையிலும், மக்களின் செலவுகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் விஷமாக உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில், விமான எரிபொருள் விலை இன்று 115% க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு கிலோலிட்டருக்கு 2.07 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்ச அளவை எட்டியுள்ளது. முன்பு இதன் விலை 96,638.14 ரூபாயாக மட்டுமே இருந்த நிவையில் தற்போது 2,07,341.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ATF விலை 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1 கிலோலிட்டர் என்பது 1000 லிட்டராகும்.
மார்ச் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை சுமார் 5.7% அதாவது 5,244.75 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி 1,10,703.08 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த உயர்வு டெல்லியில் மட்டும் நடக்கவில்லை, நாடு முழுவதும் அனைத்து சந்தையிலும் உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் 2.07 லட்சம் ரூபாயாக இருக்கும் ATF, கொல்கத்தாவில் 2,05,955.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகப்படியாக 2,14,597.66 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் ATF விலை 1,94,968.67 ரூபாயாக உள்ளது. மும்பையில் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் ATF விலை குறைவாக இருந்தாலும், கடந்த மாதம் 90,451.87 ரூபாயாக இருந்த விலையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய உயர்வாகும். நாட்டிலேயே மும்பையில் அதிகப்படியாக இன்று விமான எரிபொருள் விலை 1.14 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வின் முக்கிய காரணம், ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மத்தியில் நிலவும் போர். இந்த போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களும், விலை உயர்வும் தான் இன்றைய விமான எரிபொருள் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வுக்கான முக்கிய காரணம்.
விமான எரிபொருளில் ஏற்பட்டுள்ள இன்றைய விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செலவுகளை பெரிதும் அதிகரிக்கும். குறிப்பாக இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பயணிகள் விமான சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறக்கூடும் என்பதால் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ATF என்பது விமான நிறுவனங்களின் மொத்த செலவில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வு நேரடியாக லாபத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இண்டிகோவின் இண்டர்குளோப் மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் விலை சரியலாம்.
மேலும் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை சரி செய்ய விமான நிறுவனங்கள் உடனடியாக டிக்கெட் விலையை உயர்த்தும். இது மக்களை நேரடியாக பாதிக்கும். விமான எரிபொருள் விலை தடாலடியாக அதிகரித்துள்ளதால், விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது உறுதி, இதை விமான நிறுவனங்களால் தவிர்க்க முடியாது. இதனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணச் செலவுகள் விரைவில் அதிகரிக்கலாம்.
இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான அளவு ATF கையிருப்பில் இருப்பதாக ராஜ்யசபாவில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் விநியோகத்தில் உடனடி சிக்கல் இல்லையென அரசு விளக்கம் அளித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/jet-fuel-price-doubles-in-one-day-to-over-rs-2-lakh-per-kl-massive-shock-for-indigo-air-india-amid-786071.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
