
International
oi-Vigneshkumar
பாக்தாத்: அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தியாளர் ஷெல்லி கிட்டில்சன் ஈராக் நாட்டில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பிஸியான சாலையில் வைத்து அவரை மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு மேலாக அமெரிக்காவின் போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரை எப்படி முடிப்பது எனத் தெரியாமல் டிரம்ப் திணறி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி வந்துள்ளது.

கடத்தல்
அமெரிக்காவின் விருது பெற்ற சுதந்திர செய்தியாளரான ஷெல்லி கிட்டில்சன், செவ்வாய்க்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். ஷெல்லிக்கு இருந்த அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் முன்னரே அறிந்திருந்தது. இதன் காரணமாகவே அவரை ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி ஷெல்லி கிட்டில்சன் ஈராக் சென்றதாக அல்-மானிட்டர் அறிக்கை கூறுகிறது.
இந்தச் சூழலில் தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். ஈராக்கில் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கடத்தப்பட்டதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகமும் உறுதி செய்தது. அதேநேரம் கடத்தப்பட்டவர் பற்றிய விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை. இது தொடர்பாக ஈராக் உள் துறை அமைச்சகம் மேலும் கூறுகையில், “இன்றைய மாலை, ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.. துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையில் கடத்தல்காரர்களைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
என்ன நடந்தது
பாதுகாப்புப் படையினர் கடத்தல்காரர்களின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது அது கவிழ்ந்தது. படையினர் ஒரு குற்றவாளியைப் பிடித்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சம்பவத்தின் முழுமையான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன” எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது. கடத்தப்பட்டவர் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட ஒரு பெண் என்று பெயர் வெளியிடாத இரண்டு ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் மொத்தம் இரு கார்கள் ஈடுபட்டுள்ளது. கடத்தல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ஈராக் பாதுகாப்புப் படையினர் அந்த கார்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது தான் ஒரு கார் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், அதற்கு முன்பு செய்தியாளர் ஷெல்லி வேறு ஒரு காருக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷெல்லி இருக்கும் கார் தெற்கு பாக்தாத் பகுதியில் சென்றுவிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாக் வீடியோ
இதற்கிடையே கடத்தல் தொடர்பான வீடியோ ஒன்றை அல் அரேபியா டிவி வெளியிட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. அதில் ஷெல்லி சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார். அப்போது ஆயுதம் ஏந்திய இரு வீரர்கள் காரில் வந்து மடக்குகிறார்கள்.. கண் இமைக்கும் நேரத்தில் ஷெல்லியை வெளியே இழுத்துச் சென்று தப்பிச் செல்வது அதில் பதிவாகியுள்ளது. இந்த கடத்தல் பிஸியான சாலையிலேயே நடந்துள்ளது.
இந்த கடத்தலுக்கும் நடந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கு போருக்கும் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை. இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் அமெரிக்கா- இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவுப் படைகள் அமெரிக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதனால் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடத்தல் அபாயங்கள் குறித்து எச்சரித்து, தங்கள் குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது..
முதல்முறை இல்லை
உதாரணமாக, இஸ்ரேல் ரஷ்யக் குடியுரிமை கொண்ட பிரின்ஸ்டன் பட்டதாரி மாணவி எலிசபெத் சுரக்ளோவ், 2023-ல் பாக்தாத்தில் காணாமல் போனார். செப். 2025ல் விடுவிக்கப்பட்ட நிலையில், ஈரானிய ஆதரவுடைய கடாயீப் ஹெஸ்பொல்லா படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், அந்த குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/american-journalist-kidnapped-in-baghdad-shelly-kittleson-has-been-kidnapped-in-iraq-baghdad-786115.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
