
India
oi-Vigneshkumar
அமராவதி: ஆந்திராவில் கடந்த 2024ல் நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு வென்று ஆட்சியைப் பிடித்தார். இதற்கிடையே அந்த தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் நள்ளிரவில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், வெறும் சில நொடிகளில் பல வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநிலத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 175 தொகுதிகள் உள்ள சூழலில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பதிவு செய்தது.

ஆந்திரா தேர்தல் முடிவுகள்
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 175 இடங்களில் 164-ல் வென்று ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதலமைச்சரானார். ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா சட்டசபைத் தேர்தல் தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் பரகலா பிரபாகர் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மோசடி
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆந்திரா தேர்தலில் அசாதாரணமான வாக்குப்பதிவு முறைகள் நடந்ததாகக் குறிப்பிட்டார். நள்ளிரவுக்குப் பின் சுமார் 17 லட்சம் வாக்குகள் பதிவானதாகவும் வெறும் ஆறு நொடிகளில் பல வாக்குகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சுமார் 3,500 வாக்குச்சாவடிகளில் அதிகாலை 2 மணி வரை வாக்குப்பதிவு நடந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மட்டும் 52 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக நள்ளிரவுக்குப் பின் 17 லட்சம் வாக்குகளும், மொத்த வாக்குகளில் 4.16% இரவு 11:45 முதல் 2 மணிக்குள் பதிவானதாகவும் அவர் கூறினார். நள்ளிரவுக்குப் பிறகு ஒவ்வொரு 20 வினாடிகளுக்கும் ஒரு வாக்குப் பதிவாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சில நொடிகளில் பல வாக்குகள்
அவர் மேலும் பேசுகையில், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒருவர் வாக்களித்துவிட்டால் 14 நொடிகள் கழித்தே அடுத்த நபர் வாக்களிக்க முடியும். அப்படியிருக்கும்போது வெறும் 6 வினாடிகளில் இவ்வளவு வாக்குகள் பதிவானது எப்படி? இவ்வளவு குறைந்த நேரத்தில் வாக்களித்துவிட்டு வெளியேறுவது சாத்தியமா? இரவு 8 மணிக்கு மேல் ஏதோ அசாதாரணமானது நிகழ்ந்துள்ளது” என்றார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் ஆந்திரா தேர்தல் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பம் முதல் நபர் பரகலா பிரபாகர் இல்லை. இதற்கு முன்பே கூட எதிர்க்கட்சிகள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தனர். அதாவது வாக்குப்பதிவு நடந்த மே 13ம் மாலை 5 மணிக்கு 68.04% வாக்குகள் பதிவானதாக ஆந்திர தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இரவு 8 மணிக்கு 68.12% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், இரவு 11:45 மணிக்கு வாக்கு சதவிகிதத்தை 76.50% என்றும் நான்கு நாட்களுக்குப் பிறகு, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 81.79% என்றும் தேர்தல் ஆணையம் திருத்தியது. இது தொடர்பாக அப்போதே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை.. பூத் வரியான வாக்குகள் அடங்கிய படிவம் 17C-ஐ ஏன் பொதுவெளியில் வெளியிடவில்லை. வாக்காளர் பட்டியல்களை கம்யூட்டர்களால் ஆய்வு செய்ய முடியாத வகையில் வெளியிடுகிறார்கள். இதனால் அதை செக் செய்வது கிட்டத்தட்ட முடியாத காரியமாகிவிட்டது. ஜனநாயகம் என்பது இருளில் இயங்க முடியாது. நம்பகத்தன்மையை ஏற்படுத்த விவிபேட் சீட்டுக்களையும் கட்டாயம் எண்ண வேண்டும்” என்று விமர்சித்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/andhra-pradesh-election-fraud-votes-in-6-seconds-almost-4-votes-are-casted-after-midnight-786521.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
