
Business
oi-Prasanna Venkatesh
வீட்டு கடன் (Home Loan) வாங்கியிருப்பவர்கள் பலருக்கும் பொதுவாக எழும் கேள்வி ஒன்று -‘வீட்டுக் கடன் முடியும் வரை முதலீட்டை ஒத்திவைக்கலாமா?’ என்பதே. கடன் இருப்பது மன அழுத்தத்தை கொடுக்கும், இதனால் மன அமைதிக்காக கடனை விரைவாக அடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால், நிதி திட்டமிடல் என்று வந்தால் இந்த அணுகுமுறை சரியானதாக இருக்காது.

கடன் அழுத்தம் vs நிதி சுதந்திரம்
ஒருவர் தனது கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் அதாவது டேக் ஹோம் சம்பளத்தில் சுமார் 25% வீட்டு கடன் ஈஎம்ஐ ஆக செலுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். இது அதிகப்படியான நிதி சுமையும் இல்லை, அதேபோல் முதலீட்டுக்கான சூழ்நிலையிலும் இவருடைய சம்பளத்தில் உள்ளது. இதனால் 25 சதவீதம் என்பது ஒரு சிறப்பான அளவாகவே கருதப்படுகிறது.
ஆனால், இதேநபர் கடன் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதை விரைவாக முன்கூட்டியே அடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உருவாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இப்போது என்ன செய்யவேண்டும்..?
இங்கு முக்கியமான கேள்வி – ஓய்வுக்கால நிதி சுதந்திரம் பற்றி அந்த நபர் அதே அளவு கவலைப்படுகிறாரா? என்பது தான் ஒரு நீண்ட கால முதலீட்டு ஆலோசகரின் எதிர் கேள்வியாக இருக்கும். காரணம் ஒவ்வொரு மாதமும் முதலீட்டை தள்ளிப்போடுவது என்பது எதிர்காலத்தில் பெரிய நிதி இடைவெளியை உருவாக்கும்.
இதேபோல் இளம் வயதில் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அதிகமாக சம்பாதிக்க முடியும். ஆனால் வயதான காலத்தில் இதற்கான சாத்தியம் குறைவு என்பதால் இத்தகைய காலக்கட்டத்தில் நிதி சுதந்திரம் அவசியம். இதற்கான திட்டமிடல் ஒவ்வொரு தனிநபரிடமும் இருக்க வேண்டும்.
முதலீட்டை தாமதிப்பதால் என்ன நடக்கும்?
முதலீட்டை ஒத்திவைப்பது, சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு வருட தாமதமும், பிற்காலத்தில் இலக்குகளை அடைய அதிக முதலீட்டை தேவைப்படும். இந்த முதலீட்டு அளவு 12-14% வரை அதிகரிக்கக்கூடும்.
உதாரணமாக உங்களுடைய ஒய்வு காலத்திற்கு 3 கோடி ரூபாய் போதும் என நீங்கள் நினைத்தால் தற்போதைய 30 வயது அடிப்படையில் மாதம் 15000-20000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். இதுவே நீங்கள் ஹோம் லோன் முடித்து 40 வயதில் ஒய்வு காலத்திற்கு முதலீடு செய்ய நினைத்தால் இதே 3 கோடி பெற 45000-50000 ரூபாய் வரையில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
Compounding எனப்படும் காலத்தின் சக்தி தான் இதில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் இன்று முதலீடு செய்யும் பணம், நாளை அதிக மதிப்பாக மாறும். அதனை தள்ளிப்போடுவது, அந்த வளர்ச்சியை முழுமையாக இழக்க நேரிடம்.
ஹோம் லோன் வட்டி – வீண் செலவா?
பலர் வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துவது வீண் செலவாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது ‘கடன் செய்யும் செலவு’. அந்த செலவினால் தான் நாம் வீட்டை உடனே வாங்க முடிகிறது. அதை நீங்களும் உங்கள் குடும்பமும் அனுபவிக்க முடிகிறது. சொந்த வீடு என்ற பாதுகாப்பு உணர்வு வருகிறது.
நீங்கள் வீட்டுக்கடனை கட்டி முடிக்கும் போது பணவீக்கத்தை கொண்டு அளவிட்டால் இந்த வட்டி சுமை என்பது மிகவும் குறைவானதாக காணப்படும். அதேசமயம், சம்பளம் மற்றும் உங்களுடைய சொத்து மதிப்பும் அதிகரிக்கும்.
சரியான தீர்வு
கடனை முழுவதும் விரைவாக அடைப்பது அல்லது முதலீட்டை முழுவதும் நிறுத்துவது என்ற இரு துருவத்தில் முடிவுகளை எடுக்க தேவையில்லை. இரண்டுக்கும் இடையில் சமநிலையான அணுகுமுறையே சிறந்தது.
மாதாந்திர வருமானத்தில் இருந்து, நீண்டகால இலக்குகளுக்கான முதலீட்டை தொடர்ந்து செய்ய வேண்டும். அதே நேரத்தில், போனஸ் அல்லது சம்பள உயர்வு போன்ற கூடுதல் வருமானங்களை பயன்படுத்தி, வீட்டு கடனை முன்கூட்டியே அடைக்கலாம்.
ஸ்மார்ட் ஐடியா
இன்னொரு ஸ்மார்ட் ஆன ஐடியா என்னவென்றால் நீங்கள் செய்யும் முதலீட்டில் ஒரு சிறிய பகுதியை வீட்டுக்கடனை அடைப்பதற்காகவே தனியாக முதலீடு செய்யவும். இந்த முதலீட்டு திட்டம் முதிர்வு அடையும் பட்சத்தில் அதை தேவையான நேரத்தில் கடனை அடைக்க பயன்படுத்தலாம். ஆனால் இந்த முதலீட்டுக்கான காலம் சிறியதாக இருக்க கூடாது, சற்று நீண்ட அல்லது நடுத்தர காலமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டு கடனை 10-15 வருடத்தில் முழுமையாக அடைக்க திட்டமிட்டால் இந்த 10-15 வருடம் வரையில் முதலீட்டை தொடருங்கள். நடுவில் திட்டத்தை நிறுத்துவதோ அல்லது முதிர்வு ஆன உடனேயே வித்டிரா செய்வதோ வேண்டாம், மறுமுதலீடு செய்து முதலீட்டு காலத்தை அதிகரிக்கவும். இதன் மூலம் இந்த 10-15 வருடத்தில் நீங்கள் செய்யும் முதலீடு பெரும் தொகையாக மாறிவிடும். நீங்கள் திட்டமிட்டப்படியும் கடனை அடைக்க முடியும். இதேபோல் உங்களுடைய நிதி சுதந்திர இலக்கையும் அடைய முடியும்.
வீட்டு கடன் என்பது தவிர்க்க வேண்டிய ஒன்று அல்ல; சரியாக நிர்வகிக்க வேண்டிய ஒன்று. மன அழுத்தத்தால் முதலீட்டை நிறுத்துவது, எதிர்கால நிதி சுதந்திரத்தை பாதிக்கும். அதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்து, அவ்வப்போது கடனை குறைக்கும் balanced strategy தான் நீண்டகாலத்தில் நன்மை அளிக்கும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/should-you-stop-investing-until-your-home-loan-is-closed-the-big-mistake-most-people-make-786589.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
