
Tamilnadu
oi-Vishnupriya R
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ஹரிநாடார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்த போது ராக்கெட் ராஜாவின் தலைமையிலான பனங்காட்டு படை கட்சியின் சார்பாக ஹரி நாடார் முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்கினார். அந்தத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி 4,243 வாக்குகளை பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஹரி நாடார் களமிறங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து ஹரி நாடாரும் கழுத்தில் தங்க நகைகளை அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முதலில் இளைஞர்கள் அவரால் கவரப்பட்டனர்கள்.
இதையடுத்து நடமாடும் நகைக் கடையுடன் அவர் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து ஹரிநாடாருக்காக ஆலங்குளம் தொகுதிக்குள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனால் தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கைக் கூட்டியது. அப்போது ஹரி நாடார் அந்த தேர்தலில் 37,724 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
2021 ஆம் ஆண்டு அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்தார். பூங்கோதை 70,614 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் பூங்கோதை, மனோஜ் பாண்டியனிடம் தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு முக்கிய காரணம் ஹரி நாடாரின் ஓட்டுக்கள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் மோசடி புகார் அளித்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
அடுத்தடுத்து ஹரி நாடார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வந்தார். மற்ற வழக்குகளில் ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், பண மோசடி வழக்கில், ஹரி நாடாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்ததால், அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலேயே கடந்த 34 மாதங்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது மீண்டும் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார். இதற்காக இன்றைய தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு 1.52 கோடி வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார். அது போல் 2022- 2023, 2023- 2024, 2024- 2025 ஆகிய ஆண்டுகளில் சிறையில் இருந்ததால் வருமானம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் 45 லட்சத்தில் பார்சூனர் காரும், 29 லட்சத்தில் இன்னோவா காரும் 15 லட்சத்தில் டெம்போ டிராவலர் வண்டியும், 9.50 லட்சத்தில் மகிந்திரா எக்ஸ்யூவியும், 4.50 லட்சம் ரூபாயில் டாடா சபாரி வண்டியும், 7.50 லட்சத்தில் பொலிரோ கார் என 6 வாகனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அது போல் நகைகளை பொருத்தமட்டில் 11 கிலோ 650 கிராமில் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 17 கோடி 6 லட்சத்து 84 ஆயிரத்து 150 ஆகும். தன் மீது 24 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அவர் அந்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். கையில் 2.50 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/independent-candidate-hari-nadar-files-nomination-in-alangulam-declares-asset-details-786607.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
