
Business
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், இற்குமதி பொருட்கள் விலை உயர்வு, ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு என பலதரப்பட்ட பாதிப்புகள் உருவாகியிருக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து இந்திய நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு பெரிய நிதி பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. போர் பாதிப்பில் இருந்து இந்திய நிறுவனங்களை மீட்டு எடுக்கும் நோக்கிலும், நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், நிறுவனங்களின் வர்த்தகம், பொருளாதாரத்தை பாதிப்புகளை குறைக்கவும் சுமார் 2 – 2.5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கடன் உத்தரவாதம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், போர் காரணமாக அதிகரித்துள்ள மூலப்பொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளை சமாளிக்க நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கச் செய்வது தான். இந்த முக்கியமான திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த திட்டம் அவசியம்?
ஈரான் போர் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் தாக்கத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், நிலைமை மோசமடைந்தால் நிறுவனங்கள் குறிப்பாக MSME நிறுவனங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடும் என்ற முன்னெச்சரிக்கை உடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு தொழில் துறைகளிடமிருந்து உற்பத்தி மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாதிப்புகள குறித்து மத்திய அரசு தகவல்களை சேகரித்து வருகிறது. குறிப்பாக, மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் சப்ளை செயின் பாதிப்பு காரணமாக நிதிச் சிக்கலில் அதிகம் மாட்டிக்கொள்ளும் துறையை இதன் மூலம் அடையாளம் காண உள்ளது மத்திய அரசு.
இந்த கடன் திட்டம் எப்படி செயல்படும்?
கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அவசர கடன் உத்தரவாத திட்டமான ECLGS போலவே இந்த திட்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் அரசு கடனுக்கான முழு உத்தரவாதத்தை வழங்கியதால், வங்கிகள் எந்த அடமானமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது.
அதேபோல், இந்த புதிய திட்டத்திலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) அதிக பயன் பெறும் வகையில், அரசு ஆதரவுடன் பிணை இல்லாத கடன்களாக வழங்கப்படும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் பணப்புழக்கத்தை சீராக வைத்திருக்க முடியும்.
கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட ECLGS திட்டம் மிகுந்த வெற்றியை பெற்றது. சுமார் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு அரது உத்தரவாதம் வழங்கியது, சுமார் 1.19 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர். இதன் மூலம் 1.35 லட்சத்திற்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பாற்றப்பட்டன.
ஈரான் போர் திவாலாகும் நிலையில் நிறுவனங்கள் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக இத்தகைய திட்டத்தை உருவாக்க தயாராகி வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிறுவனங்கள் சீராக இயங்குவதற்கு தேவையான நிதி கிடைக்கும். இதனால் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படுவதுடன், உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும். இது சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இது மிகப்பெரிய ஆதரவாக அமையும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/modi-govt-plans-rs-2-2-5-lakh-crore-covid-style-credit-guarantee-scheme-to-protect-businesses-from-i-786835.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
