
Business
oi-Prasanna Venkatesh
மும்பை: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய சப்ளை செயின் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் இக்குழுமத்தில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் போரால் இனி வரும் மாதங்களில் வணிக சூழல் கூடுதல் சவாலானதாக மாறும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடிப்படை பிரச்சனை
பொதுவாக அனைத்து உற்பத்தி நிறுவனங்களிடமும் 30-45 நாட்களுக்கான மூலப்பொருட்கள் ஸ்டாக் இருக்கும், இத்தகை போர் காலத்தில் சப்ளை பாதிக்கப்பட்டால் எளிதாக சமாளித்து விடலாம். ஆனால் தற்போது ஈரான் போர் ஒரு மாதத்தை கடந்துள்ள காரணத்தால் டாடா போன்ற பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் முதல் சேலம், ஈரோடு போன்ற சிறு நகரங்களில் இருக்கும் MSME நிறுவனங்கள் வரையில் மூலப்பொருட்கள் இருப்பு குறைந்து, அதிகப்படியான விலையில் மூலப்பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.
இது உற்பத்தி செலவுகளை அதிகரித்துவிடும், இதனால் செலவுகளை சமாளிக்கவும், வர்த்தகத்தை தக்கவைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதை தான் தற்போது டாடா குழுமம் செய்கிறது.
ஊழியர்கள் முக்கியம்
டாடா குழுமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தக மதிப்பீட்டு கூட்டத்தில், மேற்கு ஆசியப் பகுதிகளில் தற்போது 10,000க்கும் மேற்பட்ட டாடா குழும ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து நிறுவனங்களின் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் என்.சந்திரசேகரன்.
வோல்டாஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் டைட்டன் கம்பெனி (டமாஸ் வணிகம் உட்பட) போன்ற பல டாடா குழும நிறுவனங்களின் பணியாளர்கள் வளைகுடா பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தேவையானால் பணியாளர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
சப்ளை செயின் பாதிப்பு
ஈரான் போர் காரணமாக உலகளாவிய சப்ளை செயின் தடைப்படுவதால், மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெட்ரோகெமிக்கல், விவசாய உரங்கள், எரிபொருள் வருகை குறைந்துள்ளது. இதன் விளைவாக உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும், அதே நேரத்தில் வர்த்தக சந்தையில் தேவையும் குறையக்கூடும் என்பதால் நிறுவனங்களின் லாப விகிதங்கள் பெரும் பாதிக்குள்ளாகும்.
மேலும் பல நிறுவனங்களின் உற்பத்திக்கூட முடங்கும் நிலை உள்ளது, புதிய கட்டுமான மற்றும் விரிவாக்க திட்டங்கள் தாமதமடையும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ஈரான் போரின் முக்கிய விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவில் போக்குவரத்து செலவுகள் மற்றும் உற்பத்தி செலவுகளை நேரடியாக பாதிக்கிறது. இதனால் சில டாடா நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பணம் முக்கியம் பாஸ்
இந்த சூழ்நிலையில், நிறுவனங்கள் தங்கள் பணப்புழக்கத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் 30 நிறுவனங்களின் சிஇஓ-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இக்காலக்கட்டத்தில் வர்த்தகத்திற்கும், சந்தைக்கும் என்ன தேவையோ அதில் மட்டும் முதலீடு செய்வும், பணத்தை சேமித்து வைத்து, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் விரிவாக்க திட்டங்களை மறுபரிசீலனை செய்தல் அவசியம் எனவும் இக்கூட்டத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், சந்தை நிலைமைகள் சீராகும் வரை நீண்டகால திட்டங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் டாடா குழும கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆக்ஷன் மோட்..
ஈரான் போர் பாதிப்பில் இருந்து இந்திய நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு பெரிய நிதி பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. போர் பாதிப்பில் இருந்து இந்திய நிறுவனங்களை மீட்டு எடுக்கும் நோக்கிலும், நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், நிறுவனங்களின் வர்த்தகம், பொருளாதாரத்தை பாதிப்புகளை குறைக்கவும் சுமார் 2-2.5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கடன் உத்தரவாதம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/tata-group-ceos-warned-of-challenging-times-as-west-asia-conflict-disrupts-supply-chains-n-chandra-786873.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
