
Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை ஓரளவுக்குச் சரிந்துள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே சிலர் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து, அதில் வரும் பணத்தை வைத்து தங்கம் வாங்கலாமா என்பது குறித்தும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தங்கம் விலை உச்சத்தில் இருந்து இப்போது மெல்லச் சரிந்து வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும், கையில் பணம் இல்லாதவர்கள் தங்கத்தை வாங்க ஏதேதோ திட்டம் போடுகிறார்கள். அப்படி அவர்கள் தரும் யோசனைகளில் ஒன்று தான் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து மீண்டும் தங்கத்தை வாங்குவது.

தங்கத்தை அடகு வைத்து
நாளை விலை ஏறும்போது இதன் மூலம் கணிசமான பணத்தைச் சேமிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இது கேட்க நல்ல ஐடியா போலத் தெரிந்தாலும் கூட இதில் பல ரிஸ்க்குகள் இருப்பதாக எச்சரிக்கிறார் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன். ஏன் ஒருவர் கடன் வாங்கி அதில் தங்கத்தை வாங்கக்கூடாது என்பதையும் அவர் ஈஸியாக விளக்குகிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், “அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இப்போது தங்கம் விலை சரியும் நிலையில், கூடுதலாகச் சரிந்தால் என்ன செய்வீர்கள்.. இந்தாண்டு உச்சத்தில் இருந்தே தங்கம் விலை கிட்டத்தட்ட 18% வரை சரிந்து இருக்கிறது. நீங்கள் நகைக்கடன் வாங்கியிருந்தால் LTVல் 18% குறைந்து இருக்கும். அப்போது கூடுதல் பணத்தைக் கட்ட சொல்வார்கள். உங்களால் கட்ட முடிய வேண்டும்.
ரிஸ்க் என்ன
அதாவது நான் என்னிடம் உள்ள தங்கத்தை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடனாக வாங்கிவிட்டேன். விலை சரிவதால் அதன் மதிப்பு ரூ.7.5 லட்சமாகக் குறைந்துவிட்டது. அப்போது நான் உடனடியாக ரூ.2.5 லட்சத்தைக் கட்ட வேண்டும் என வங்கி சொல்லும். இந்தச் சூழலில் அனைவராலும் பணத்தைக் கட்ட முடியுமா என எனக்குத் தெரியாது. எனவே, கையிருப்பில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வைத்தே இதை முடிவு செய்ய வேண்டும்.
ஆனால், எனது கொள்கை படி கடன் வாங்கி தங்கத்தை வாங்காதீர்கள். முதலீடு என்பது கையில் இருக்கும் கூடுதல் பணத்தை வைத்துச் செய்வதாகவே இருக்க வேண்டும். கடன் வாங்கி செய்வதாக இருக்கக் கூடாது. யாரோ ஒரு (அமெரிக்க முதலீட்டாளர்) ஜார்ஜ் சோராஸ் இப்படிச் செய்கிறார் என்று நாம் அவரை பார்த்துச் சூடு போட்டுக் கொள்ளக்கூடாது. நம்ம எல்லாரும் ஜார்ஜ் சோரஸ் ஆகிவிட முடியாது.
யாருக்கு தங்கம் வேண்டாம்
யார் தங்கம் வாங்க வேண்டும்.. யார் தங்கம் வாங்கக்கூடாது என்பது அவரவரது பொருளாதார சூழலை வைத்தே முடிவு செய்ய வேண்டும். எனக்கு இப்போது தங்கம் தேவையில்லை. ஏனென்றால் நானும் எனது மனைவியும் தான் எனது குடும்பம். என்னிடம் கடன் பத்திர முதலீடுகள் உள்ளன. சொந்த வீடும் இருக்கிறது. இதேபோக அப்பாவின் வீடும் இருக்கிறது. இப்போது எனக்கு 60 வயதாகிறது. வாழ்நாளுக்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்துள்ளேன். இதனால் எனக்கு இனிமேல் தங்கம் தேவையில்லை.
ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும். அவர்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்குத் தங்கம் தேவைப்படும். எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த சூழலில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே தங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது மாறுபடும்! உங்கள் பெற்றோர் கொடுத்த தங்கத்தை அப்படியே உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடலாம். பெற்றோர் தரவில்லை என்றால் நீங்கள் வாங்கி சேர்க்க வேண்டும்” என்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/anand-srinivasan-says-one-should-not-take-a-gold-loan-to-buy-gold-explains-the-associated-risks-787209.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
