
Business
oi-Prasanna Venkatesh
பெங்களூர்: இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழும் அனிருத் ரவிச்சந்தர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து தான் கால் வைக்கும் அனைத்து சந்தைகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வரும் வேளையில் அடுத்தக்கட்ட நகர்வுகளை எடுத்து வைத்துள்ளார்.
சமீப காலமாக அனிருத் தனது இசை பயணத்தை, தொழில்துறை பயணமாக திசை திருப்பியுள்ளார். இசையைத் தாண்டி பல்வேறு வணிக துறைகளில் தன்னை ஈடுப்படுத்தி ஒரு முழு நேர பிஸ்னஸ்மேன் ஆக உருவெடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தனிப்பட்ட மியூசிக் லேபிள் உருவாக்கிய அனிருத் தற்போது புதிதாக பியூட்டி துறை நிறுவனத்தில் பார்ட்னராக இணைந்துள்ளார்.

பியூட்டி துறையில் இறங்கிய அனிருத்
அனிருத் ரவிச்சந்தர்-ன் பலமே அவருடைய இளம் ரசிகர்கள் தான், இதை பல முன்னணி பிராண்டுகள் கவனிக்க துவங்கிய நிலையில், அடுத்தடுத்து வர்த்தக துறையில் இறங்குவதற்கு வழிதடம் கிடைத்துள்ளது.
தற்போது டீகன்ஸ்டிரக்ட் (Deconstruct) என்ற ஸ்கின்கேர் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக பங்குதாரராக இணைந்துள்ளார் அனிருத். பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் மாலினி அடாபுரெட்டி என்பவரால் தொடங்கப்பட்டது.
டீகன்ஸ்டிரக்ட் (Deconstruct) – அனிருத் மத்தியிலான கூட்டணி ஒரு சாதாரண விளம்பர ஒப்பந்தமாக அல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், அனிருத் தனது பிரபலத்தைக் கொண்டு பிராண்ட் வளர்ச்சியில் நீண்டகால பங்களிப்பை வழங்கப் போகிறார். மேலும் இந்நிறுவனத்தின் நிர்வாகத்திலும் அமரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் நிறுவனத்தின் தரப்பில் பார்ட்னர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
டீகன்ஸ்டிரக்ட் (Deconstruct) நிறுவனம் இளம் தலைமுறையினரை குறிவைத்து, “ingredient-based skincare” என்ற புதிய அணுகுமுறையை முன்னிறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய பியூட்டி மார்க்கெட்டில் இந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து, நவீன ஸ்கின்கேர் பிராண்டாக தன்னை உயர்த்தியுள்ளது.
அனிருத் போன்ற இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கொண்ட பிரபலத்தை பங்குதாரராக கொண்டு வருவது, டீகன்ஸ்டிரக்ட் (Deconstruct) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்ட் விசிபிலிட்டியை பலப்படுத்தும். இந்த இணைப்பு, குறிப்பாக பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை ஈப்பதோடு, ஸ்கின்கேர் விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியையும் டீகன்ஸ்டிரக்ட் (Deconstruct) நிறுவனம் மேற்கொள்ளும்.

மதுபான வர்த்தகம்
பியூட்டி துறையைத் தாண்டி, அனிருத் மதுபான வணிகத்திலும் முக்கியமான பாதையை அமைத்து வருகிறார். 2024ஆம் ஆண்டு முதல், பிரீமியம் மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் ஈடுபட்டுள்ளார் அனிருத்.
Loca Loka பிராண்ட் மதுபானத்தை அனிருத் தனியாக நிர்வாகம் செய்யவில்லை, தெலுங்கு நடிகரான ராணா மற்றும் ஹைதராபாத் தொழிலதிபர் ஸ்ரீ ஹர்சா ஆகியோருடன் இணைந்து தொடங்கியுள்ளனர்.
முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட இந்த பிராண்ட், தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் விரைவில் இந்த மதுபானத்தை அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது என்று அனிருத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மியூசிக் லேபிள்
வணிக துறைகளில் மட்டும் அல்லாமல், இசைத் துறையிலும் தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அனிருத் சமீபத்தில் தனிப்பட்ட மியூசிக் லேபிள் Albuquerque Records தொடங்கியுள்ளார். இந்த லேபிள் மூலம் வளர்ந்து வரும் கலைஞர்களை உலகின் முன் கொண்டு வரும் முக்கிய முயற்சியாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார். இது அவரின் படைப்பாற்றலையும், வருமான வாய்ப்புகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/anirudh-ravichander-expands-business-empire-from-premium-liquor-venture-to-skincare-brand-partnersh-787643.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
