
Business
oi-Prasanna Venkatesh
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 முதல் துவங்கிய 2026-27 புதிய நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை ஏப்ரல் 6 முதல் தொடங்கியுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவுகள் ஏப்ரல் 8 காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக பாதிப்பு உலக நாடுகளில் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது, இதனால் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை துவங்கியுள்ளது. இந்தியாவில் ரீடைல் சந்தையில் எரிபொருள் விலை உயரவில்லை என்றாலும், மொத்த விற்பனை எரிபொருள், வணிக சிலிண்டர் விலை – LPG தட்டுப்பாடு, பெட்ரோகெமிக்கல் பொருட்கள் விலை, விமான எரிபொருள் விலை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல் முதல் காய்கறி வரையில் விலை உயர துவங்கியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தையும், ரூபாய் மதிப்பையும் இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்துமா அல்லது பொருளாதார வளர்ச்சிக்காக வட்டி விகிதத்தை தொடர்ந்து மாற்றாமல் தக்கவைக்குமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆர்பிஐ-யின் நாளைய முடிவில் வங்கிகளுக்கான பென்ச்மார்க் வட்டி விகிதங்களான ரெப்போ விகிதம், நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதை குறித்து முக்கிய சிக்னல்களை வழங்கும். இது சாமானிய மக்களை தாண்டி முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானது.
ஆர்பிஐ 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தை ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு பேர் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) நடத்துகிறது. இந்த குழு, நாட்டின் வட்டி விகித நிலை, பணவீக்கத்தின் போக்கு, மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாக ஆய்வு செய்து ஏப்ரல் 8ஆம் தேதி தனது முடிவுகளை வெளியிடும்.
குறிப்பாக, பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை (repo rate) மாற்றப்படுமா என்பது சந்தையின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. வட்டி விகிதத்தில் செய்யப்படும் சிறிய மாற்றமும் வீட்டு கடன் EMI, வங்கி சேமிப்பு வட்டி ஆகிய அனைத்தையும் நேரடியாக பாதிக்கும்.
ஆர்பிஐ ‘Wait and Watch’ அணுகுமுறை
பிப்ரவரி மாதத்தில் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில், ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 5.25% ஆக மாற்றாமல் வைத்தது. 2025ஆம் ஆண்டு முழுவதும் 125 அடிப்படை புள்ளிகள் (basis points) குறைத்த பிறகு, மத்திய வங்கி wait and watch என்ற அணுகுமுறையை எடுத்தது.
அதாவது, வட்டி விகிதத்தை உடனடியாக மாற்றாமல், பொருளாதார நிலையை கவனித்து பார்க்கும் நிலைப்பாட்டை எடுத்தது. தற்போது ஈரான் போர் காரணமாக நிலைமை மோசமாக இருக்கும் வேளையில் மீண்டும் அதே நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் ஆர்பிஐ தலையீட்டின் காணமாக பெரிய அளவில் சரிவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு என்பது நாட்டின் இறக்குமதி செலவுகளை உயர்த்தி, பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன. இதனால் RBI எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் தாக்கம்
விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில் ரெப்போ விகிதம் உயர்ந்தால் கடனுக்கான ஈஎம்ஐ உயரும். இது கோடிக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கும், MSME நிறுவன உரிமையாளர்களையும் பாதிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வட்டி விகிதம் உயராமல் இருப்பதே சர்ப்ரைஸ் தான்.
சந்தை எதிர்பார்ப்பு
நிபுணர்கள் கருத்துப்படி, RBI இந்த முறை வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருந்தால், கடுமையான முடிவுகளும் எடுக்கப்படலாம். இதனால், இந்த MPC கூட்டம் முதலீட்டாளர்கள், வங்கிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.
ஆர்பிஐ முடிவுகள் அறிவிக்கும் நேரம்
ஏப்ரல் 8 காலை 10 மணிக்கு RBI தனது நாணய கொள்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, எடுத்த முடிவுகளின் பின்னணி மற்றும் எதிர்கால திசை குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/rbi-mpc-meeting-april-2026-big-announcement-on-april-8-will-home-loan-vehicle-loan-interest-rat-787889.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
