
Business
oi-Prasanna Venkatesh
கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல், இன்று முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப மிக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானுடன் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தத்தை அறிவித்தததும், இதை ஈரான் உடனுக்குடன் ஏற்றதும் தான் இன்றைய முதலீட்டு சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பிட்காயின் விலை இன்றைய வர்த்தகத்தில் 72,000 டாலருக்கு மேல் சென்றுள்ளது. இந்த போர் நிறுத்த அறிவிப்பு உலகளாவிய சந்தையில் பதற்றத்தை சற்று குறைத்து, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதை காட்டுகிறது.

20 நாட்களில் உச்சம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிட்காயின் விலை 20 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக 72,000 டாலரை கடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்த நிலையில், ஈரானும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் வெளியான ஒரு மணி நேரத்திற்குள் பிட்காயின் சுமார் 6% உயர்ந்து 72,732.43 டாலர் வரை சென்றது. பொதுவாக அரசியல் பதற்றம் கிரிப்டோ சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் இத்தகைய போர் நிறுத்த அறிவிப்பு சிக்னல்கள் வந்தால் விலைகள் வேகமாக உயர்வது வழக்கம்.
டிரம்ப் அறிவிப்பின் பின்னணி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக உலக சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தன. ஹார்முஸ் நீரிணை மூடல் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்த நிலையில், டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். இதேவேளையில் நேற்று அமெரிக்க கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஏப்ரல் 2008க்கு பின்பு 117 டாலர் வரை உயர்ந்தது, இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
இந்த சூழலில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்து, இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு தான் தற்போது முதலீட்டு சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிட்காயின் விலை ஏன் உயர்ந்தது?
பொதுவாக, உலக அளவில் அரசியல் பதற்றம் அதிகரிக்கும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்வார்கள். ஆனால், போர் நிறுத்தம் போன்ற நல்ல செய்தி வரும்போது, ரிஸ்க் எடுக்கும் மனநிலை (risk-on sentiment) அதிகரிக்கும். இதனால் பிட்காயின் போன்ற அதிக ரிஸ்க்கான சொத்துக்களில் முதலீடு அதிகரிக்கும், இது அதன் விலையை உயர்த்தும்.
மத்திய கிழக்கு மோதல் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வரை பிட்காயின் விலை மோசமான நிலையை சந்தித்து வந்தது. ஆனால், டிரம்பின் அறிவிப்பு அந்த பாதிப்பை நீக்கி, சந்தையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயின் மட்டுமின்றி, எத்தீரியம், சொலானா உள்ளிட்ட பிற கிரிப்டோ நாணயங்களும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
போர் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டால், உலக சந்தைகள் மேலும் நிலைத்தன்மையை அடையும். அப்போது பிட்காயின் உள்ளிட்ட ரிஸ்க் நிறைந்த சொத்துக்களின் விலை இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நிபந்தனைகள் நிறைவேறாவிட்டால் அல்லது பதற்றம் மீண்டும் அதிகரித்தால், விலை வீழ்ச்சியும் ஏற்படலாம். எனவே, வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் முதலீட்டு சந்தையை பெரியளவில் பாதிக்கப்போகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/bitcoin-surges-past-72-000-after-trump-announces-2-week-ceasefire-with-iran-strait-of-hormuz-reop-788029.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
