
International
-Vigneshkumar
தெஹ்ரான்: வளைகுடா போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் அனுமதிக்க ஈரான் சம்மதித்து இருக்கிறது. இதற்கிடையே அந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை ஈரானுக்கு தரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் செய்யச் சம்மதிக்கவே மாட்டேன் எனச் சொல்லி வந்த ஈரான், இப்போது இரு வாரங்கள் தற்காலிகமாகப் போரை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் அங்கு நிலவி வந்த குழப்பம் ஓரளவுக்குத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ்
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படுகிறது. இந்த வளைகுடா மோதலில் ஹார்முஸ் தான் முக்கிய பேசுபொருளாக இருந்தது. ஏனென்றால் சர்வதேச கச்சா எண்ணெய், எல்பிஜி வர்த்தகத்தில் கணிசமான பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இதனால் ஹார்முஸை ஈரான் முடக்கியது சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சுங்க கட்டணம்
இந்தச் சூழலில் தான் இந்த இரண்டு வாரக் கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கும் ஓமனுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.. அதாவது ஹார்முஸ் வழியாகச் செல்ல உலக நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்குக் குறிப்பிட்ட தொகையை ஈரான் மற்றும் ஓமனுக்கு சம்பந்தப்பட்ட கப்பல்கள் சுங்க கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஈரான் அதிகாரி
இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் இருந்து இந்த நாடுகள் சுங்க கட்டணத்தை வசூலிக்கலாம். இந்த நிதி ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்” என்றார். போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த நிதி மீண்டு வரப் பயன்படும். அதேநேரம் ஓமன் இந்த நிதியை எதற்காகப் பயன்படுத்தும் என்பது குறித்து உடனடியாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை.
பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்குபெற்ற ஒரு அதிகாரியே இந்த தகவல்களைத் தெரிவித்தார். அதேநேரம் கூடுதல் தகவல்களைச் சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த அதிகாரி மறுத்துவிட்டார். ஹார்முஸ் ஜலசந்தியின் பிராந்திய உரிமைகளை ஈரானும் ஓமனும் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது..
கச்சா எண்ணெய்
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரப் போர்நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து, கடந்த சில மணி நேரங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $94.50ஆக, அதாவது சுமார் 13.6% சரிந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை கூட கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்த சூழலில், இப்போது போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சரிய ஆரம்பித்துவிட்டது.
அதேநேரம் போரால் மோசமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் விலைகள் போருக்கு முந்தைய ஒரு பேரல் $70 என்ற நிலைக்கு உடனடியாக திரும்பச் சாத்தியமில்லை என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.. மறுபுறம் கச்சா எண்ணெய் சரிந்ததால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிகிறது. இதனால் தங்கம் விலை ஏற்கனவே உயர ஆரம்பித்துவிட்டது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/hormuz-strait-toll-fees-to-iran-and-oman-tehran-to-charge-shipping-fees-under-ceasefire-deal-011-788117.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
