
Business
oi-Prasanna Venkatesh
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று நடந்து முடிந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்காமல் 5.25 சதவீதத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஏற்கனவே ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதேபோல் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் தற்போதைய குறைவான வட்டியில் கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக மக்கள் அனைவரும் யோசிக்க வேண்டியது, எந்த வங்கியில் குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது என்பது தான். அதிலும் முக்கியமாக ஆர்பிஐ ரெப்போ விகித அறிவிப்புக்கு பின்பு வங்கிகளில் எத்தகைய மாற்றங்களை செய்துள்ளது என்பதையும் வேண்டிய கட்டாயம் உள்ளது.

வீட்டுக் கடன் வாங்க திட்டமிடும் மக்களுக்கு குட்நியூஸ் ஆக பொதுத்துறை வங்கிகளில் 7.10 சதவீத வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு வாய்ந்த வட்டி விகிதம் அனைவருக்கும் கிடைக்காது. இதற்கு பல செக் பாக்ஸ்களை வங்கிகள் வைத்துள்ளது. நீங்கள் அனைத்து செக் பாக்ஸ்களையும் டிக் செய்தால் மட்டுமே 7.10 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
இந்தக் குறைந்த விகிதங்கள் பலருக்கு வீடு வாங்கும் கனவை எளிதாக்கும் என்றாலும், வட்டி விகிதம் மட்டும் பார்த்து கடன் வாங்கினால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். ஹோம் லோன் வாங்கும் போது வட்டி விகிதத்தை தாண்டி, கடனுக்கான செயல்முறை கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்கள், கடன் கால அளவு, திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதம்
தற்போதைய நிலவரப்படி குறிப்பாக ஆர்பிஐ ரெப்போ விகித அறிவிப்புக்கு பின்பு, பல முக்கிய பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை மூன்று பிரிவுகளாக பிரிந்து வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்துள்ளது. ரூ.30 லட்சம் வரை, ரூ.30-75 லட்சம், ரூ.75 லட்சத்துக்கு மேல் என 3 பிரிவுகளாக பிரித்து கடனுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூன்று பிரிவுகளிலும் 7.25% முதல் 8.95% வரை விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா ரூ.30 லட்சம் வரை மற்றும் ரூ.30-75 லட்சம் வரை 7.20% முதல் 9.00% வரையும், ரூ.75 லட்சத்துக்கு மேல் 7.20% முதல் 9.25% வரையும் விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அனைத்து பிரிவுகளிலும் 7.15% முதல் 9.50% வரை விகிதத்தை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.30 லட்சம் வரை 7.30% முதல் 9.30% வரையும், மற்ற பிரிவுகளில் 7.25% முதல் 9.20% வரையும் விகிதத்தில் உள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா ரூ.30 லட்சம் வரை மற்றும் ரூ.30-75 லட்சம் வரை 7.10% முதல் 10.00% வரையும், ரூ.75 லட்சத்துக்கு மேல் 7.10% முதல் 10.25% வரையும் விகிதத்தில் கடன் தருகிறது.
கனரா பேங்க் ரூ.30 லட்சம் வரை 7.25% முதல் 10.00% வரையும், ரூ.30-75 லட்சம் வரை 7.20% முதல் 10.00% வரையும், ரூ.75 லட்சத்துக்கு மேல் 7.15% முதல் 9.90% வரையும் விகிதத்தில் உள்ளது.
யூகோ பேங்க் அனைத்து பிரிவுகளிலும் 7.15% முதல் 9.25% வரை விகிதத்தை வழங்குகிறது.
இந்த வட்டி விகிதங்கள் 9 ஏப்ரல் 2026 நிலவரப்படி வங்கிகளில் ஹோம் லோன் வழங்கி வருகிறுது. ஆனால் இறுதி விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோர், கடன் தொகை மற்றும் கடன் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
வட்டி விகிதம் மட்டும் போதாது
வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், அது மட்டும் போதாது. கடனுக்கு வசூலிக்கப்படும் செயல்முறை கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்கள், கடன் கால அளவு மற்றும் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவை நீண்டகாலத்தில் பல லட்சம் ரூபாய் வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே, வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் பல வங்கிகளில் திட்டமிட்டு முழுமையான ஒப்பீடு செய்த பிறகு முடிவு எடுக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர் முக்கியம்
750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் மிகச் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் வங்கிகள் குறைந்த ரிஸ்க் என்று கருதி சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. ரிஸ்க் அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் உயரும். இதை வங்கிகள் தங்களின் ரிஸ்க் மேலாண்மைக்காக செய்கின்றன.
சிறந்த முடிவு எடுக்க எளிய வழி
ஒவ்வொரு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் உண்மையான தகவல்களை (கடன் தொகை, கால அளவு, மாத வருமானம்) உள்ளிட்டு ஒப்பீடு செய்யலாம். இது உங்களுக்கு தெளிவான முடிவுக்கு வர உதவும். கடன் வாங்கும் முன் நீங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை சரியாக மதிப்பீடு செய்வது மிக முக்கியம். இதனால் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/home-loan-interest-rates-latest-update-after-rbi-repo-rate-announcement-know-this-before-taking-h-788497.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
