
India
oi-Vigneshkumar
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. மாநில அரசை முடிவு செய்யும் ஒன்றாக இருந்தாலும் கூட.. அதன் வரலாற்றை நாம் பார்த்தால் அது மாநில எல்லைகளுக்குள் மட்டுமே இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. பல விஷயங்கள் அசாமில் தான் சோதிக்கப்பட்டு, அதுவே தேசிய அளவில் பரவி, அரசியல் வியூகங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் முக்கிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இப்போது தேர்தல் நடக்கிறது. அது மாநிலச் சட்டசபைத் தேர்தல் தான் என்றாலும் தேசியளவில் இது கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் அசாம் தேர்தல் வியூகங்களே நாடு முழுக்க எதிரொலிக்கிறது. தற்போதும் கூட அசாம் தேர்தல் களத்தில் நடந்து வரும் பெரிய அளவிலான மாற்றங்கள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.

அசாம்
அசாமில் பாஜகவின் எழுச்சி இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைகிறது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜகவால் பெரியளவில் அசாமில் வெல்ல முடியவில்லை. வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2016 இல் சுமார் 60 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. பின்னர், 2021இல் தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனது நிலையை மேலும் வலுப்படுத்தியது.
இதற்கு இரு முக்கிய காரணங்களைச் சொல்லலாம். ஒன்று உள்ளூர் தலைவர்களை வலுப்படுத்தியது. அசாமில் மாநில அளவிலும் சரி, பிராந்தி அளவிலும் சரி, உள்ள தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அடுத்து பாஜக பலவீனமாக இருந்த பிராந்தியங்களில் கூட்டணிகள் மூலம் கட்சியை வலுப்படுத்தினர். இந்த இரண்டும் தான் பாஜகவுக்குப் பெரியளவில் உதவியது. இதையே தான் பிறகு பாஜக தேசிய அளவிலும் செய்து 2019 மற்றும் 2024ல் ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ, என்ஆர்சி
அதேபோல இந்தியாவின் சில மிக முக்கியமான அரசியல் விவாதங்களுக்கு அசாம் ஒரு மையப்புள்ளியாக இருந்துள்ளது. தேசியக் குடிமக்கள் பதிவு திட்டம் இங்குப் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாநிலம் தழுவிய போராட்டங்களை ஏற்படுத்தியது. இங்கு வெடித்த பிறகே இந்த இரண்டுமே ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்தது.
மேலும், அசாம் தேர்தல் என்பது எப்போதும் வெறுமன அடையாள அரசியலை மையப்படுத்தி இருப்பதில்லை. வீட்டு வசதித் திட்டங்கள், மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது அடையாள அரசியலுடன் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த மாடலையே பல அரசியல் கட்சிகள் செயல்படுத்துகின்றன. அதாவது அசாமில் சோதிக்கப்படும் மாடலையே பாஜக மற்ற மாநிலங்களில் செயல்படுத்துகிறது.
சிறுபான்மையினர்
அசாமில் மற்றொரு முக்கிய அம்சம், சிறுபான்மையினர் வாக்களிக்கும் முறை.. அசாம் மக்கள் தொகையில் சுமார் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இவர்கள் ஏறக்குறைய 22 தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள். இருப்பினும், வாக்களிக்கும் முறைகள் ஒரே மாதிரியாக இல்லை. பல தேர்தல்களில், சிறுபான்மை வாக்குகள் பிரிகிறது. இப்படி வாக்குகள் பிரிவது வெற்றியை மொத்தமாக மாற்றியுள்ளது. இந்த நிலை அசாமிற்கு மட்டுமானது இல்லை. உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும், சிறுபான்மையினர் வாக்களிக்கும் முறை இதுபோலவே இருக்கிறது. இது பாஜகவுக்கே சாதகமாகப் போகிறது.
பிரச்சார முறை
மேலும், இந்த முறை அசாம் பிரச்சாரத்தில் தலைமைத்துவ பாணியில் ஒரு நுட்பமான மாற்றம் காணப்பட்டது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற தலைவர்கள் வழக்கமான மேடை பிரச்சாரத்தைத் தாண்டி வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறார்கள். மக்கள் குறைகளைக் கேட்கிறார்கள். பல சமூக மக்களை அழைத்துப் பேசுகிறார்கள். அடிப்படை அரசியல் மாறவில்லை என்றாலும் மக்களை எப்படி தொடர்பு கொள்கிறோம் என்ற முறை மாறியுள்ளது. இந்த முறை சீக்கிரமே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம்.!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/assam-assembly-election-2026-why-the-north-east-state-poll-could-shape-india-s-future-politics-788313.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
