திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! | US VP Aircraft surrounded by Pakistan aircrafts as Peace Talks Begin in Islamabad, What happened

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. இதற்கிடையே பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் விமானத்தைப் பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் சூழ்ந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த இந்த மோதல் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் 15 நாட்களுக்கு தாக்குதல் வேண்டாம் என முடிவு செய்துள்ளது. மேலும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

US VP Aircraft surrounded by Pakistan aircrafts as Peace Talks Begin in Islamabad What happened

பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் தான் போரை நிரந்தரமாக முடிவு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் இந்த பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், பிறகு அது இன்று சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கச் சார்பில் துணை அதிபர் வேன்ஸ், ஈரான் சார்பில் உயர் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

1979ம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பயணித்த ‘போயிங் சி-32ஏ’ (Boeing C-32A) விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தவுடன், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து **எஃப்-16 (F-16)** போர் விமானங்கள் அதைச் சூழ்ந்து கொண்டன.

சூழ்ந்த போர் விமானங்கள்

எது அமெரிக்கத் துணை அதிபர் விமானத்தைச் சூழ்ந்துவிட்டதா.. இதனால் எதாவது பதற்றம் ஏற்படுமா என நினைக்க வேண்டாம். அமெரிக்க துணை அதிபருக்கு மரியாதை கொடுக்கவும் அவரது விமானத்தைப் பாதுகாப்பாக அழைத்து வரவுமே இந்த விமானங்கள் சூழ்ந்தன. அதனைப் பாதுகாப்பாகச் சூழ்ந்து எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தன. இஸ்லாமாபாத் அருகே உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கிய அமெரிக்க டீமில், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஈரான்

ஈரான் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குகின்றனர். இருப்பினும், அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மை இன்னும் நீடிப்பதாக ஈரான் சபாநாயகர் காலிபாப் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அவர் மேலும், “எங்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது, ஆனால் அமெரிக்கர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவம் எப்போதும் தோல்வியிலும், மீறப்பட்ட வாக்குறுதிகளிலுமே முடிந்திருக்கிறது” என அவர் வெளிப்படையாகவே சாடியுள்ளார்.

சுமுகமாக நடக்குமா!

பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைவது பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் 15 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் மற்றும் அதன் ராணுவ வலிமைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

மறுபுறம் ஈரானின் 10 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறது.. தாக்குதல்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து நஷ்டஈடு கோருவதுடன், ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானுக்கே இறையாண்மை இருப்பதாகவும் அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என ஈரான் முக்கிய நிபந்தனையை வலியுறுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், லெபனான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், இஸ்லாமாபாத் சந்திப்பு அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என தெரிகிறது.


Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-vp-aircraft-surrounded-by-pakistan-aircrafts-as-peace-talks-begin-in-islamabad-what-happened-789035.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo