
International
oi-Velmurugan P
லண்டன்: ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா அறிவித்துள்ள கப்பல் முற்றுகை நடவடிக்கையில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என இங்கிலாந்து அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா – இங்கிலாந்து இடையே உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏன் இங்கிலாந்து மறுத்தது.. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணிநேரமாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை முறிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முற்றுகையில் இங்கிலாந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் கப்பல் போக்குவரத்தில் சுதந்திரத்தையே விரும்புகிறோம். உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டியது அவசியம். பிரான்ஸ் போன்ற இதர நாடுகளுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவே நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”
முன்னதாக, இங்கிலாந்து தனது கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இங்கிலாந்தோ அமெரிக்காவின் முற்றுகை திட்டத்தை விடுத்து, பிரான்ஸ் உடன் கூட்டணி அமைத்து மாற்று வழியில் செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் இதுபற்றிக் கூறுகையில், “அமெரிக்காவுடன் ஈரான் விவகாரத்தில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு உள்ளது உண்மைதான். இது ட்ரம்ப் நிர்வாகத்துடனான எங்கள் உறவில் சிறு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த முற்றுகைத் திட்டம் உலகிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் கடற்படை அதிகாரி ஜோ செஸ்டாக் எச்சரித்துள்ளார். “அமெரிக்கா இந்தப் போருக்குத் தயாராக இல்லை. ஒரே நாளில் நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான ஏவுகணைகளை நாம் பயன்படுத்திவிட்டோம். இழந்த ஏவுகணைகளை மீண்டும் நிரப்ப 2035-ம் ஆண்டு வரை ஆகும்” என அவர் கவலை தெரிவித்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/uk-snubs-trump-refuses-to-join-us-blockade-of-strait-of-hormuz-amid-iran-war-789451.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


