
Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை ஈரான் போர் ஆரம்பித்த பிறகு பெரியளவில் ஏறவில்லை. அது சீராக குறைந்து வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக அது மீண்டும் மெல்ல ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். குறிப்பாகத் தங்கம் விலை மீண்டும் ரூ.10,000க்கு போகுமா என்பது குறித்து விளக்கியுள்ளார்.
இந்தியாவில் தங்கம் தான் முதல் சேமிப்பு என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 2, 3 ஆண்டுகளாகத் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வந்ததால் பொதுமக்களால் அதைப் பெரியளவில் வாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 வரை கூட சென்றது. இந்தச் சூழலில் தான் சடன் பிரேக் போட்டு தங்கம் விலை குறைந்தது.

தங்கம் விலை
வளைகுடாவில் போர் வெடித்தது முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. இதற்கிடையே ஒரு வாரமாகத் தங்கம் விலை மதில் மேல் பூனையாக உள்ளது. இரண்டு நாட்கள் குறைந்தால் அதன் பிறகு ஏறுவது என மாறி மாறி இருந்து வருகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக விளக்கியுள்ளார். குறிப்பாகத் தங்கம் விலை குறைந்தால் அது எந்தளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவில் நேற்று ஏற்கெனவே பணவீக்கம் 3.3%க்கு போய்விட்டதாக வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். அப்படியிருக்கும் போது, அமெரிக்காவில் வட்டி விகிதத்தை ஏற்றுவார்களா என்ற கேள்வி வருகிறது. ஒருவேளை இந்தியாவில் வட்டியை ஏற்றாமல், அமெரிக்கா மட்டும் வட்டியை ஏற்றினால், இந்தியாவில் இருந்து பணம் இன்னும் வேகமாக வெளியே போகும். வரப்போகும் காலம் கடினமான ஒன்றாக இருக்கும் என்றே தெரிகிறது. இதுவரை பார்க்கும்போது இந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
அதனால்தான் நான் சொல்கிறேன், தங்கம் வலுவாக இருக்கும். அதிகபட்சம் ரூ.100, 200 குறையலாம், ரூ.500 குறையலாம்… அதிகபட்சம் ரூ.12,500 வரை போகலாம்.. ஆனால், போர் நின்றவுடன் தங்கம் விலை சட்டென உயர ஆரம்பித்துவிடும்.
மீண்டும் ரூ.10,000
தங்கம் 10,000 ரூபாய்க்குப் போகுமா எனச் சிலர் கேட்கிறார்கள். அதற்கு எல்லாம் சான்ஸே கிடையாது. அப்படிப் போக வேண்டுமென்றால், இருவருக்கும் இடையேயான போர் பெரிதாக வெடிக்க வேண்டும். போர் நிறுத்தம் முடிந்து, மீண்டும் தாக்குதல் நடக்க வேண்டும். எனது நிலைப்பாடு ரொம்பவே எளிமையானது. போர் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஒருவேளை மீண்டும் இரண்டு நாடுகளும் கடுமையாக அடித்துக்கொண்டால், தங்கம் 12,500 ரூபாய்க்குக் கூட வரலாம். ஆனால், அதற்கு இரண்டு வாரங்கள் இருவரும் அடித்துக்கொள்ள வேண்டும்.
சிக்கல்
ஆனால், இங்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. தங்கம் ரூ.12,000-க்கு வந்தது என்றால், கச்சா எண்ணெய் விலை 200 டாலருக்குப் போய்விடும். எனவே நாம் இரண்டு பக்கத்தையும் தெளிவாகப் பார்க்க வேண்டும்” என்றார். அதாவது கச்சா எண்ணெய் 200 டாலர் என்பது இப்போது இருக்கும் விலையில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு. அப்படியிருந்தால் பெட்ரோல், டீசல் விலையும் கூட கணிசமாக உயரலாம். இது சர்வதேச அளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/anand-srinivasan-explains-if-gold-rate-will-drop-to-10-000-what-is-his-opinion-on-yellow-metal-789457.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


