
Business
oi-Prasanna Venkatesh
இந்திய பங்குச்சந்தை திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கும். அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மட்டும் அல்லாமல் டிரம்ப் அமெரிக்க கடற்படை கொண்டு மொத்த ஹார்முஸ் வழித்தடத்தையும் முடக்குவோம் என்று அறிவித்த காரணத்தால் தற்போது முதலீட்டு சந்தையில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் உலக சந்தைகளில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் பெரும் சரிவை பதிவு செய்ய துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனால் உலக அளவில் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய சந்தையும் அதன் தாக்கத்தை உணர துவங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவு
வெள்ளிக்கிழமை ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கையில் இந்திய சந்தை மிக வலுவான நிலையில் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1.20 சதவீதம் உயர்வுடன் 918.60 புள்ளிகள் உயர்ந்து 77,550.25 என்ற அளவில் முடிந்தது. நிஃப்டி 50 குறியீடு 275.50 புள்ளிகள் உயர்ந்து 24,050.60 என்ற நிலையில் முடிவடைந்தது. ஆனால் வார இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கும்போதே பெறும் சரிவுடன் துவங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசிய சந்தைகள் மற்றும் உலகளாவிய எதிரொலி
ஆசிய சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கும்போது பலவீனமாக வர்த்தகமாகின. ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 0.84 சதவீதம் சரிந்தது. டாபிக்ஸ் 0.42 சதவீதம் குறைந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 1.83 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கோஸ்டாக் 1.43 சதவீதம் சரிந்தது. ஹாங்காங் ஹாங் செங் ஃபியூச்சர்ஸ் குறைவான திறப்பை சுட்டிக்காட்டின.
அமெரிக்க ஸ்டாக் ஃபியூச்சர்ஸும் வீழ்ச்சியடைந்தன. டவ் ஜோன்ஸ் ஃபியூச்சர்ஸ் 517 புள்ளிகள் அதாவது 1.1 சதவீதம் சரிந்தன. எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸும் 1.1 முதல் 1.2 சதவீதம் வரை குறைந்தன.
கிஃப்ட் நிஃப்டி சமிக்ஞை
ஆசிய சந்தையும், அமெரிக்க பியூச்சர்ஸ் சந்தையிலும் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் முன்பே, இன்றைய வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதை காட்டும் கிஃப்ட் நிஃப்டி 23,740 என்ற அளவில் வர்த்தகமாகியது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24,020 புள்ளிகளில் முடிந்த கிஃப்டி நிஃப்டி இன்று காலை வர்த்தகத்திலேயே 1.2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இது இந்திய சந்தை திங்கள்கிழமை குறைவான வர்த்தக துவக்கத்துடன் திறக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த சிக்னலை சரியாக கவனித்து, தங்களுடைய முதலீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திங்கள்கிழமை சந்தை திறப்பு எப்படி இருக்கும் என்பது முழுக்க முழுக்க உலக சந்தைகளின் போக்கு மற்றும் புவி அரசியல் செய்திகளைப் பொறுத்தது அமைகிறது. இந்திய பொருளாதாரமும், நுகர்வும் சிறப்பாக இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையின் தாக்கும் இதை பாதித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் பங்குச்சந்தையில் கூடுதல் பாதிப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எந்த புதிய ராணுவ நடவடிக்கையும் இல்லாததால், சந்தை சிறிய இறக்கத்துடன் வர்த்தகமாகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/sensex-and-nifty-set-for-gap-down-opening-on-monday-as-us-iran-ceasefire-talks-collapse-triggers-oil-789491.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



